மேலும் செய்திகள்
மேய்ச்சல் ஆடுகளை குறிவைக்கும் நாய்கள்
22-Oct-2025
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே சிறுத்தைகள் ஆடுகளையும், மாடுகளையும், தொடர்ச்சியாக கொன்று வருவதால், உயிருக்கு பயந்து விவசாயிகள் ஆட்டுப்பட்டிகளை காலி செய்துள்ளனர். கோவை மாவட்டம், காரமடை அடுத்த வெள்ளியங்காடு, முத்துக்கல்லூர், ஆதிமாதையனூர், தோலம்பாளையம் ஆகிய பகுதிகளில், சமீப காலமாக விவசாயிகள் அமைத்துள்ள பட்டிகளுக்கு, சிறுத்தைகள் வந்து செல்கின்றன. பட்டிகளில் காவலுக்கு ஆட்கள் ஏதும் இல்லாததால், சிறுத்தைகள் ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் ஆடு, மாடுகள் வளர்ப்பதை, சமீப காலமாக விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். இதற்காக வாங்கிய மூங்கில் தட்டிகளை எடுத்து வந்து, தங்களது தோட்டத்தில் அடுக்கி வைத்துள்ளனர். ஆதிமாதையனூரை சேர்ந்த, விவசாயி ராமசாமி, 75 கூறியதாவது: ஆடுகள் மேய்ந்துக் கொண்டிருக்கும் பொழுது, மறைவில் இருந்து சிறுத்தைகள் ஆடுகளை தாக்கி, இழுத்துச் செல்கின்றன. சிறுத்தையை விரட்டும் அளவிற்கு எங்களுக்கு துணிவு இல்லை. நம்மீது பாய்ந்து விடுமோ என்ற அச்சம் இருப்பதால், சத்தம் மட்டுமே போட முடிகிறது. பகலில் ஆறு ஆடுகளையும், இரவில் இரண்டு ஆடுகளையும் சிறுத்தைகள் கொன்று இறைச்சியை சாப்பிட்டுள்ளது. சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இறந்த ஆடுகளுக்கு இதுவரை இழப்பீட்டுத் தொகை ஏதும் வழங்கவில்லை. எனவே விவசாயிகளுக்கு உயிர் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், மீண்டும் பட்டிகள் அமைத்து ஆடு, மாடுகளை வளர்க்கவும், வனத்துறை நடவடிக்கை எடுத்து, சிறுத்தைகளை பிடிக்க வேண்டும். வனத்துறையினர் மலையோர பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் கூறுகையில், ''வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிக்க, ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை சிறுத்தைகளால் உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்'' என்றார். இது குறித்து காரமடை வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், வெள்ளியங்காடு அருகே உள்ள முத்துக்கல்லூரில் சிறுத்தை பிடிக்க, கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் நிரந்தரமாக சிறுத்தைகள் நடமாட்டம் ஏதுமில்லை. மலைப்பகுதி வழியாக செல்லும் சிறுத்தை, மலையோரம் உள்ள ஆடு, மாடுகளை தாக்கி வருகிறது. இதை பிடிக்க இரண்டு வனத்துறை குழுவை அமைத்து, இரவு பகலாக இப்பகுதியில் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தையை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன, என்றார்.
22-Oct-2025