அக்., மூன்றாம் வாரம் துவங்குகிறது தொழுநோய் 2ம் கட்ட கணக்கெடுப்பு
கோவை; கோவை மாவட்ட தொழுநோய் ஒழிப்பு பிரிவின் கீழ், முதல்கட்ட கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணி, அக்., மாதம் மீண்டும் துவங்கவுள்ளது. நடப்பாண்டுக்கான முதல் கட்ட கணக்கெடுப்பு, ஆக., 1ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்தது. களப்பணியாளர்கள் 4.94 லட்சம் வீடுகளுக்கு சென்று, 18.21 லட்சம் நபர்களை பரிசோதனை செய்தனர். இதில், தொழுநோய் பாதிப்பு உறுதிசெய்த நபர்களுக்கு உடனடியாக சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது. கோவை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய் ஒழிப்பு) சிவக்குமாரி கூறியதாவது: முதல்கட்ட கணக்கெடுப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு பணிகள் அக்., மூன்றாம் வாரம் துவங்கும். தொழுநோய் பாதிப்பை, ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்திவிட முடியும். ஆய்வுகளின் போது, முதியோர் இல்லங்கள், கட்டுமான பணியாளர்கள், வெளி மாநிலத்தவர் தங்கும் இடங்கள், பள்ளிகள் ஆகிய இடங்களில், கூடுதல் கவனம் செலுத்துகின்றோம். தோலில் நிறமாற்றம், தோல் தடித்து காணப்படுதல், பளபளப்பாக மாறுதல், முடிச்சு போன்ற கட்டிகள், கண் இமை மூடமுடியாத நிலை, கை, கால்களில் புண்கள், விரல்கள் மடங்கி இருத்தல் போன்ற அறிகுறிகள் இருப்பின், தயக்கமின்றி அருகிலுள்ள சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் காண்பிக்க வேண்டும். முற்றிலும் குணப்படுத்த இயலும் என்பதால், அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.