உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பசுமை பட்டாசு வெடிப்போம்! மாசற்ற தீபாவளி... மனசெல்லாம் மத்தாப்பூ

பசுமை பட்டாசு வெடிப்போம்! மாசற்ற தீபாவளி... மனசெல்லாம் மத்தாப்பூ

மேட்டுப்பாளையம்: 'பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசு படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அரசு அனுமதி வழங்கிய நேரத்தில் மட்டும்தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.உச்ச நீதிமன்ற அறிவிப்பின் அடிப்படையில், தமிழக அரசு தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, பட்டாசுகளை இந்த நேரத்தில் மட்டுமே வெடிக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.போலீசார் கூறுகையில், 'பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசு படுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பொது இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் மட்டும் தான் வெடிக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து மற்றும் மாசற்ற தீபாவளி கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்றனர்.வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என மேட்டுப்பாளையம் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ''வனப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை கண்டிப்பாக வெடிக்கக் கூடாது.இதனால் வன விலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் வனப்பகுதி சாலையில் இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டாம். வனப்பகுதிக்குள் பட்டாசுகளை வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ