வனவிலங்குகளுடன் இசைந்து வாழ்வோம்! தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு
வால்பாறை: வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், சமீப காலமாக வனவிலங்கு - மனித மோதல் அதிகரித்துள்ளது. யானை, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் தாக்குதலால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து, வனத்துறை சார்பில் வனவிலங்கு - மனித மோதலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை இயற்கை பாதுகாப்பு மையத்தின் சார்பில், பச்சமலை, நடுமலை, வாட்டர்பால்ஸ், வேவர்லி, இஞ்சிப்பாறை எஸ்டேட்டில், வனவிலங்குகளுடன் மனிதர்கள் இசைந்து வாழ்தல் குறித்து தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெருக்கூத்து நடந்தது. நிகழ்ச்சியை, வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கணேஷ் துவக்கி வைத்தார். வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் பேசியதாவது: வாழ்விடத்துக்கு வரும் வனவிலங்குகளுக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது. யானைகளுக்கு பிடித்தமான வாழை, பலா, கொய்யா போன்றவைகளை குடியிருப்பில் பயிரிடக்கூடாது. அதே போல் சிறுத்தைக்கு பிடித்தமான நாய், ஆடு, மாடு, கோழிகளை குடியிருப்பில் வளர்க்ககூடாது. திறந்தவெளியில் இறைச்சிக்கழிவுகளை வீசக்கூடாது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த வால்பாறையில் இரவு நேரங்களில் தொழிலாளர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். யானைகள் முகாமிட்டுள்ள தேயிலை எஸ்டேட்டில், தொழிலாளர்கள் தேயிலை பறிக்க செல்லக்கூடாது. வனவிலங்குகளால் தான் இயற்கை பாதுகாப்பாக உள்ளது. வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யாமல், அவற்றுடன் இசைந்து வாழ்வோம், என, தெருக்கூத்து வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில், வனத்துறை அதிகாரிகள், வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள், எஸ்டேட் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.