உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாயத்துக்கு துணை நிற்கும் தேனீக்களை பாதுகாப்போம்! இன்று உலக தேனீ தினம்

விவசாயத்துக்கு துணை நிற்கும் தேனீக்களை பாதுகாப்போம்! இன்று உலக தேனீ தினம்

பொள்ளாச்சி; 'இயற்கை சீற்றங்களால் தேனீ பெட்டிகள் பாதிக்கப்படும் போது, காப்பீட்டு வாயிலாக காப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என தேனீ வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழிலே பிரதானமாக உள்ளது. அதில், தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உலக தேனீ தினமான இன்று தேனீ வளர்ப்போர், கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வலியுறுத்தியுள்ளனர்.தேனீ விவசாயி விவேக் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தேனீ வளர்ப்பு தொழிலாளர்கள் உள்ளனர்.தென்னை, வாழை, மா, கோகோ போன்ற பயிர்களை போன்று, தேனீ பெட்டிகளுக்கும் இயற்கை சீற்றங்களால் பாதிப்படையும் போது, காப்பீட்டு திட்டம் வாயிலாக காப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்.தேனீ வளர்ப்போருக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். ரசாயன பயன்பாடு அதிகரிப்பால், விவசாயிகளுக்கும், இயற்கைக்கும் உறுதுணையாக இருக்கும் தேனீ இனங்கள் அழிந்து வருகிறது.இதே நிலை நீடித்தால், தமிழகத்தின் தேனீ வளர்ப்பு தொழில் கேள்விக்குறியாகிவிடும். எனவே, மத்திய, மாநில அரசுகள், தேனீ வளர்ப்பு தொழிலை பாதுகாக்க உதவ வேண்டும். போலியான தேன்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும். உள் நாட்டு தேன் மற்றும் தேன் சார்ந்த பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும். விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்க, மகரந்தச்சேர்க்கைக்கு தேனீக்கள் முக்கிய பங்குவகிக்கின்றன. விவசாயத்துக்கு துணை நிற்கும் தேனீக்களை பாதுகாக்க வேண்டும். அதேபோன்று, மருத்துவ குணமுள்ள, தேன் உற்பத்தியை பாதுகாக்க வேண்டும்.இரவு நேரங்களில் தேனீ காலநிலை, இடம் விட்டு இடம் மாற்ற எடுத்துச் செல்லும் போது பல்வேறு விபத்துகளும், விஷ பூச்சிகளின் ஆபத்து உள்ளது. எனவே, தேனீ வளர்ப்பாளர்களுக்கும் காப்பீடு வழங்க வேண்டும்.வெளிநாடுகளை போன்று இந்தியாவிலும் அறிவியல் பூர்வமாக தொழில்நுட்பங்கள் கூடிய தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ள வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும்.அனுபவமிக்க வெளிநாடு தேனீ வளர்ப்பு வல்லுநர்களுடன் கலந்துரையாடல் செய்திட வேண்டும். மேலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், தேனீ வளர்ப்போருக்கு எளிய முறையில் கடன் வழங்க வேண்டும். இன்று உலக தேனீ தினத்தில் கோரிக்கைளை நிறைவேற்றிட அரசு முன்வர வேண்டும். இவ்வாறு, கூறினார்.

'லோகோ' வடிவமைப்பு!

பொள்ளாச்சி அருகே, திவான்சாபுதுாரை சேர்ந்த விவசாயி விவேக், தேனீ வளர்ப்போரை ஊக்குவிக்கவும், அவர்களுக்கான ஓர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தும் விதமாக, இரு தென்னை மரங்களுக்கு இடையே உலக உருண்டையும், அதன் மீது தேனீ இருப்பது போன்று 'லோகோ'வடிவமைத்துள்ளார்.இந்த 'லோகோ'வுக்கு அரசிடம் அங்கீகாரம் பெற்று பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாகவும், தேனீ வளர்ப்பு, தேன் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை