நாட்டு கோழி வளர்ப்பு மோசடி; பங்குதாரருக்கு 10 ஆண்டு சிறை
கோவை; நாட்டு கோழி வளர்ப்பு மோசடி வழக்கில், நிதி நிறுவன பங்குதாரருக்கு, 10 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலையில், 2012ல் சந்தியா பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நாட்டு கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி மற்றும் போனஸ் தருவதாக விளம்பரபடுத்தினர்.ஆனால், முதிர்வு காலம் முடிந்து டெபாசிட் தொகை மற்றும் வட்டி தராமல் மோசடி செய்தனர். இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கையில், 105 டெபாசிட்தாரர்களிடம், 1.32 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.இது தொடர்பாக, நிதி நிறுவன பங்குதாரர்கள் மணிகண்டன்,46, மற்றும் இவரது தந்தை முருகவேல், ஊழியர் ஸ்டாலின்,49, ஆகியோர், கடந்த 2012, செப்., 17ல் கைது செய்யப்பட்டனர். பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.இவர்கள் மீது, கோவையிலுள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ( டான்பிட்) வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. வழக்கில், 13 ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.விசாரித்த நீதிபதி செந்தில்குமார், குற்றம் சாட்டப்பட்டவர்களில், மணிகண்டனுக்கு, 10 ஆண்டு சிறை, 84.7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். முருகவேல் விசாணையின் போது இறந்து விட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. ஸ்டாலின் விடுதலை செய்யப்பட்டார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கண்ணன் ஆஜரானார்.