UPDATED : செப் 15, 2026 11:32 PM | ADDED : செப் 15, 2026 10:24 PM
கோவை: கட்டட அனுமதி கேட்டு விண்ணப்பிப்பவர்கள், மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது என, மாநகராட்சி நகரமைப்பு பிரிவின் மீது புகார் கிளம்பியுள்ளது. நேற்று நடந்த பதிவு பெற்ற பதிவாளர் சங்க கூட்டத்திலும் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மாநகராட்சியில் நகரமைப்பு பிரிவு முக்கியமானது. கட்டட அனுமதி வழங்குதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பேனருக்கு அனுமதி வழங்குதல், அனுமதியற்ற பேனர்களை அகற்றுதல் உள்ளிட்ட வேலைகள் இவர்களுடையது. 2022ம் ஆண்டில் வெளியான அரசாணைப்படி மாநகராட்சியில், 5 மண்டலங்களில் தலா இரு உதவி நகரமைப்பு அலுவலர்கள் வீதம் 10 உதவி நகரமைப்பு அலுவலர்கள் நியமிக்க வேண்டும். 4 ஆண்டுகளாக இதை பின்பற்றவில்லை. தி.மு.க. ஆட்சியில் 3 உதவி நகரமைப்பு அலுவலர்கள் இருந்தனர். த.வெ.க. ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு, புதிதாக 3 நகரமைப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். 5 மண்டலங்களுக்கும் சேர்த்தே 2 உதவி நகரமைப்பு அலுவலர்கள் தான் உள்ளனர். நகரமைப்பு பணியை விரைவுபடுத்த ஒவ்வொரு மண்டலத்துக்கும் 2 உதவி பொறியாளர்கள் (பிளானிங்) நியமிக்க உத்தரவிடப்பட்டது. 7 உதவி பொறியாளர்கள் தான் உள்ளனர். நகரமைப்பு பணிகள் முழுமையாக முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. பொறியாளர்கள் சிலர் கூறுகையில், 'ஆன்லைன் விண்ணப்பம் ப்ராசஸ் ஆவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. விண்ணப்பத்தின் நிலை குறித்து மக்கள் அறிய முடியவில்லை. கோப்புகள் காணாமல் போனதாக கூறி, மீண்டும் சமர்ப்பிக்க சொல்கிறார்கள். ஒரே கோப்பை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பாமல், அனைத்து குறைகளையும் ஒன்றாக சொல்லி நிவர்த்தி செய்ய வேண்டும். கோப்புகளை முடித்து வைக்க, அலுவலர்களுக்கு கால வரையறை நிர்ணயிக்க வேண்டும். கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்து, ஒரு மாதத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. அரசாணைப்படி ஒரு மண்டலத்துக்கு 2 உதவி நகரமைப்பு அலுவலர் நியமித்து, பணிகளை துரிதப்படுத்த வேண்டும்' என்றனர். மாநகராட்சி நகரமைப்பு திட்ட அலுவலர் தாமோதரனிடம் கேட்டபோது, அலுவலர்கள் பற்றாகுறையால் அதிக சுமை இருப்பது உண்மைதான். அரசாணைப்படி கூடுதல் அலுவலர்களை நியமிக்க அரசிடம் கேட்டுள்ளோம். கோப்புகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.