காப்பக நிர்வாகிகளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
பொள்ளாச்சி : கோவை மாவட்டம், சோமனுாரை சேர்ந்த ரவிக்குமார் மகன் வருண்காந்த், 22; மனநலம் பாதித்தவர். மூன்று மாதங்களுக்கு முன், பொள்ளாச்சி முல்லை நகரில் உள்ள 'யுதிரா சாரிடபிள் டிரஸ்ட்' என்ற தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.காப்பக நிர்வாகிகள், ஊழியர்கள் சேர்ந்து, வருண்காந்த்தை அடித்து கொலை செய்து, உடலை புதைத்தனர். இந்த வழக்கில், காப்பக நிர்வாகிகளான கிரிராம், ஷாஜுவின் தந்தை செந்தில்பாபு, 'கேர் டேக்கர்' நித்திஷ், பணியாளர்கள் ரங்கநாயகி, சதீஷ், ஷீலா ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.தலைமறைவான காப்பக நிர்வாகிகள் ஷாஜு, லட்சுமணன், மனநல ஆலோசகர் கவிதா உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் தேடுகின்றனர். இதற்காக, மூன்று தனிப்படை அமைத்து, தமிழகம், கேரள மாநிலத்தில் தேடுதல் நடக்கிறது. அதேநேரம், அவர்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, விமான நிலையம் மற்றும் துறைமுகங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.