உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  காதலர்கள் கடத்தல் : 4 பேர் கைது

 காதலர்கள் கடத்தல் : 4 பேர் கைது

போத்தனூர்: மலுமிச்சம்பட்டியில் வசிப்பவர் கவுதம், 23. இவர் திருமலையாம்பாளையத்திலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு பயிலும் மாணவியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் பேக்கரி ஒன்றில் பேசிக் கொண்டிருந்தனர். அங்கு வந்த பெண்ணின் உறவினர் ஒருவர் இதுகுறித்து திருமலையாம்பாளையத்தில் வசிக்கும் பெண்ணின் பெரியம்மாவுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தாய் உள்ளிட்ட ஐந்து பேர், பெண்ணை தங்களுடன் வருமாறு அழைத்துள்ளனர். பெண் மறுத்ததால், வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற முயன்றனர். கவுதம் தடுத்தபோது இருவரையும் அக்கும்பல் காரில் ஏற்றி கடத்திச் சென்றது. கவுதம், தான் கடத்தப்படுவது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல், அனைத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு இருவரும் பழனி டவுன் போலீசாரால் நடத்தப்பட்ட, வாகன சோதனையில் மீட்கப்பட்டனர். கடத்திய ஐந்து பேர் உள்பட ஏழு பேரும் க.க.சாவடி, போலீசாரிடம் நேற்று அதிகாலை 2:00 மணியளவில் ஒப்படைக்கப்பட்டனர். கடத்தல் வழக்கு பதிவு செய்து போலீசார், செல்வபானுமதி, 40, திருநெல்வேலியை சேர்ந்த டிரைவர் ஆதியப்பன், 29, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் ஜீவா, 21, ஸ்ரீராம் ரோஷன் மற்றும் சிறுவன் உட்பட ஐந்து பேரை, கைது செய்தனர். சிறுவன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். பெண்ணின் பெரியம்மா உட்பட, நான்கு பேரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ