| ADDED : பிப் 22, 2024 02:35 AM
கோவை:குடிபோதையில் திரிந்த இளைஞர், மேலும் குடிக்க பணமில்லாமல், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கோவை மாவட்டம், ஒண்டிபுதுார் பஸ் ஸ்டாப் அருகே, தனியார் வங்கி ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை ஏ.டி.எம்., உடைக்கப்படுவதாக, கொச்சியில் உள்ள வங்கியின் பிரதான அலுவலகத்தில் எச்சரிக்கை மணி ஒலித்தது. அக்கிளையின் மேலாளர், கோவையில் வங்கிக்கிளை மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். மேலாளர், ஏ.டி.எம்.,மை ஆய்வு செய்தபோது பணம் வைக்கும் பெட்டகம் அறையின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார். அவர், போலீசில் புகார் அளித்தார். சிங்காநல்லுார் போலீசார், ஏ.டி.எம்., மைய கண்காணிப்பு கேமராக்களில் உள்ள காட்சிகளின்படி விசாரித்தனர்.விசாரணையில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைக்க முயன்றது, திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த வேலுச்சாமி, 19, என்பவர் எனத் தெரிந்தது. அவரை கைது செய்தனர்.மேலும் மது குடிக்க பணம் இல்லாததால், குடிபோதையில் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்தது விசாரணையில் தெரிந்தது. போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.