உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்குரு அகாடமி சார்பில் “மனிதன் ஒரு வளமல்ல” நிகழ்ச்சி

சத்குரு அகாடமி சார்பில் “மனிதன் ஒரு வளமல்ல” நிகழ்ச்சி

கோவை: ஈஷா யோக மையத்தில், சத்குரு அகாடமியின் சார்பில் 'மனிதன் ஒரு வளமல்ல (Human is not a Resource - HINAR)' எனும் வருடாந்திர நிகழ்ச்சி நடைபெற்றது. ஜூன் 13 முதல் 15 வரை, மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 80 பேர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சி, மனிதர்களை வெறும் வளங்களாக அல்லாமல், சாத்தியங்களாகப் பார்க்கும் மாற்றத்தை பணியிடங்களில் ஏற்படுத்தும் நோக்கில் சத்குருவால் உருவாக்கப்பட்டது. இது குறித்து சத்குரு கூறுகையில், “மனிதன் ஒரு வளமல்ல. மனிதன் ஒரு அற்புதமான சாத்தியமாகும். மனிதர்களை வெறும் வளங்களாக அணுகினால், அவர்களின் உள்ளார்ந்த திறமைகளை ஒருபோதும் வெளிக்கொணர முடியாது” எனக் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில், மனிதர்களை மையமாகக் கொண்ட பணியிடங்களை வடிவமைக்கும் நடைமுறை உத்திகளை பங்கேற்பாளர்களுக்கு வழங்கும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இதனுடன் உள்நிலை நல்வாழ்வு, தெளிவு மற்றும் சமநிலை ஆகியவற்றை அடைய உதவும் எளிய சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகளும் இந்நிகழ்ச்சியில் வழங்கப்படுகின்றது. இந்தாண்டிற்கான நிகழ்ச்சியை மஹிந்திரா ஹாலிடேஸின் தலைமை வணிக அதிகாரி அசுதோஷ் பாண்டே வழிநடத்தினார். மனித திறனை வெளிப்படுத்துவதற்கு 'நிறுவன கலாசாரம் (organizational culture)' எவ்வாறு உதவும் என்பதை மையமாகக் கொண்டு இந்தாண்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தாண்டு நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக, மனிதர்களை நிர்வகிப்பதற்கு மிக முக்கியமான தலைமைத்துவ திறன்களான கேட்டல் மற்றும் கவனித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட தனித்துவமான 'நாடகப் பயிற்சி அமர்வும்' நடைபெற்றது. இதனை பிரபல நாடகக்கலைஞர் அக்ஷரா மிஸ்ரா வழிநடத்தினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆக்ஸிஸ் வங்கியின் மனிதவளத்துறை தலைவர் ராஜ்கமல் வெம்படி, ஸ்மைல் குழுமத்தின் நிர்வாக பங்குதாரர் மனீஷ் விஜ், கிண்ட்ரில் நிறுவனத்தின் மனிதவளத்துறை தலைவர் அகஸ்டஸ் அசாரியா, மற்றும் அன்க்யூப் நிறுவனர் டாக்டர் ஷாலினி லால் ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அவர்கள் குறிப்பாக பொருளாதார ரீதியாகவும், புவிசார் அரசியல், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் நிரம்பிய நிச்சயமற்ற எதிர்காலத்தில் திறமையானவர்களை பணிக்கு நியமித்தல், வளர்த்தல் மற்றும் தக்கவைத்துக் கொள்ளுதல் குறித்த தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.மனிதர்களை கையாள்வதில் ஈஷாவின் அணுகுமுறை எவ்வாறு, 400 நகரங்களில் உள்ள அதன் 17 மில்லியன் தன்னார்வலர்களின் செயல்பாடுகளை வடிவமைத்து செல்வாக்கு செலுத்துகிறது என்பது குறித்து பங்கேற்பாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். இதற்கு ஈஷாவின் தன்னார்வலர்களான சுவாமி உல்லாசா, மௌமிதா சென் சர்மா (சத்குரு அகாடமியின் இயக்குநர்), சவுரப் ஜெயின் மற்றும் சுவாமி சுகதா ஆகியோர் பதிலளித்தனர். சத்குரு அகாடமி சார்பில் ஆண்டுதோறும் இன்சைட், மனிதன் ஒரு வளமல்ல உள்ளிட்ட தலைமைத்துவ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் ரத்தன் டாடா, இன்போசிஸ் நாராயணமூர்த்தி, இஸ்ரோ சோம்நாத், கிரண் மசும்தார் ஷா போன்ற நாட்டின் தலைசிறந்த சாதனைத் தலைவர்கள் பங்கேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை