வீடு கட்டி தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்தவருக்கு சிறை
கோவை; வீடு கட்டி தருவதாக கூறி, 18 லட்சம் ரூபாய் மோசடி செய்தவருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை, கணபதி, ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், கவுண்டம்பாளையம், வேணுதோட்டத்தை சேர்ந்த கோபிநாத்,55, ஆகியோர், 'இன்பிரா டெவலப்பர்ஸ்' என்ற கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தனர்.சரவணம்பட்டியில் ஹவிஷா என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டி விற்பனை செய்யப்பட உள்ளதாக விளம்பரப்படுத்தினர். இதையடுத்து, அவிநாசியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர், கட்டுமான நிறுவன பங்குதாரர்களை சந்தித்து, வீடு கட்டுவதற்காக, 18 லட்சம் ரூபாய் கொடுத்தார். உறுதியளித்தபடி வீடு கட்டி கொடுக்கவில்லை.பணத்தை திருப்பி கேட்ட போது, முதல் கட்டமாக, 7.5 லட்சம் ரூபாய்க்கு காசோலை கொடுத்தனர். ஆனால், அவர்களது வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்ப வந்தது. மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், இருவர் மீதும், 2013, டிச., 21ல் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை, ஜே.எம்:7, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் இந்திரஜித், குற்றம் சாட்டப்பட்டவர்களில், கோபிநாத்துக்கு, மூன்றாண்டு சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். ரவிச்சந்திரன் இறந்துவிட்டதால், அவர் மீதான வழக்கு கை விடப்பட்டது.