உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒப்பந்தப்படி கூலியை தர உற்பத்தியாளர்கள் சம்மதம்

ஒப்பந்தப்படி கூலியை தர உற்பத்தியாளர்கள் சம்மதம்

சோமனூர்; ஒப்பந்தப்படி கூலியை தர, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், விசைத்தறி சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கூலி யின் அடிப்படையில், 1.5 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, ஒப்பந்தப்படி கூலியை வழங்காமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் குறைத்து வழங்கி வந்தனர். இதனால், நெருக்கடிக்கு உள்ளான விசைத்தறியாளர்கள், புதிய கூலி ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். அதை சட்டப்பாதுகாப்புடன் அமல்படுத்த வேண்டும், என, கோரிக்கை விடுத்து, காலவரையற்ற வேலைநிறுத்தம்,உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த ஏப்., மாதம் ஏற்படுத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் ஒப்பந்தப்படி கூலி உயர்வு அமலுக்கு வந்தாலும், திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட, தெக்கலூர், அவிநாசி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி உற்பத்தியாளர்கள் புதிய கூலி உயர்வு வழங்கவில்லை. இதையடுத்து, விசைத்தறி சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதன் காரணமாக, கோவை தொழிலாளர் நல அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு வர இரு தரப்புக்கும் அழைப்பு விடுக்கபட்டது. இதற்கிடையில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், தலைவர் பூபதி தலைமையில், உடுமலைப்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, விசைத்தறி தொழில் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு, மின் கட்டண சலுகைகள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர். புதிய கோரிக்கைகளையும் வலியுறுத்தினர். இதனையடுத்து, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், ஒப்பந்த கூலியை அமல்படுத்தாத ஜவுளி உற்பத்தியாளர்களை தொடர்பு கொண்டு, கூலி உயர்வை வழங்க வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் உதவி கமிஷனர் சாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் விசைத்தறி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். தங்கள் தரப்பு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒப்பந்தப்படி கூலி உயர்வை வழங்க, சம்மந்தப்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். கூலி உயர்வு வழங்காமல் காலதாமதம் செய்தால், உடனடியாக கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும், என, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இதனால், ஓரிரு நாட்களில் கூலி உயர்வு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை விசைத்தறியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை