தானமாக கிடைக்கும் தாய்ப்பாலை நம்பி பல பச்சிளங்குழந்தைகள் காத்திருக்கின்றன
சூலுார் : அந்த காலத்தில், பிறந்து மூன்று ஆண்டுகள் வரையிலும் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுத்து வளர்த்தனர். காலப்போக்கில் தாய்ப்பால் என்பது குறைந்து, புட்டி பால் கொடுப்பது அதிகரித்தது. குழந்தைகள் ஆரோக்கியமாக வளர, தாய்ப்பால் ஒன்றுதான் சிறந்த தீர்வாக இருக்கும். ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் உள்ளிட்ட தானங்களை போல், தாய்ப்பால் தானமும் தற்போது தேவையாக உள்ளது என்கிறார், தற்போது இந்த சேவையில் ஈடுபட்டுள்ள, கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த விசித்ரா செந்தில்குமார். அவர் கூறியதாவது: பிறக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் என்பது உணவு மட்டுமல்ல; சர்வரோக நிவாரணி. அனைத்து நோய் எதிர்ப்பு சக்தியும் அடங்கியுள்ள அமிர்தம் அது. அந்த தாய்ப்பால் கிடைக்கப்பெறாத குழந்தைகளுக்கு, அதை கொண்டு சேர்க்கும் சேவையை, அவிநாசி கிழக்கு ரோட்டரி அமைப்புடன் இணைந்து, 2021 ஆக., மாதம் துவங்கினோம். அன்று முதல், தாய்ப்பால் தானம் செய்ய முன் வரும் தாய்மார்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்து, பதப்படுத்தி, திருப்பூர், கோவை, சேலம், திருச்சி, மணப்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள, அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு வழங்கி வருகிறோம். தற்போது, பல தாய்மார்கள் தாய்ப்பால் தானம் தர முன் வருகின்றனர். ஆயுள் வரை எதிர்ப்பாற்றலை தரும் தாய்ப்பால், கைவிடப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட, பல குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுவதால், இந்த சேவையை எங்கள் குழுவினர் மனமுவந்து செய்து வருகிறோம். நகர் பகுதிகள் மட்டுமல்ல; கிராமப்புற பெண்களும் தாய்ப்பால் தானம் செய்ய முன் வர வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாகும். தானமாக கிடைக்கும் தாய்ப்பாலை நம்பி, பல பச்சிளங்குழந்தைகள் காத்திருக்கின்றன. இவ்வாறு, அவர் கூறினார். தாய்ப்பால் தானம் செய்ய முன் வரும் தாய்மார்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்து, பதப்படுத்தி, திருப்பூர், கோவை, சேலம், திருச்சி, மணப்பாறை ஆகிய பகுதிகளில் உள்ள, அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கிக்கு வழங்கி வருகிறோம்.