உலக நலன் வேண்டி அரச மரம், வேப்ப மரத்துக்கு திருமணம்
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள திருமுருகன் நகர் கற்பக விநாயகர் கோவிலில் உலக நலன் வேண்டி, அரசமரம், வேப்ப மரத்துக்கு திருமணம்நடந்தது.உலகம் நலம் பெற வேண்டியும், திருமண தோஷம் விலகவும், புத்திர பாக்கியம் ஏற்படவும், ராகு கேது தோஷம் விலகவும், அரச மரம் மற்றும் வேப்ப மரத்துக்கு திருமண நிகழ்ச்சி துடியலூர் அருகே உள்ள திருமுருகன் நகரில் நடந்தது.நேற்று காலை, 7:00 மணிக்கு மங்கள வாத்தியம், தொடர்ந்து, விநாயகர் பூஜை, கலச பூஜை, ஹோமம் நடந்தது. சீர்வரிசையை மங்கள வாத்தியத்துடன் ஆலயம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாப்பிள்ளை வீட்டார் சீர்வரிசை, பெண் வீட்டார் சீர்வரிசை கொண்டுவரும் நிகழ்ச்சிகள் நடந்தன. மாங்கல்யம் அணிவித்தல், ஆசீர்வாதம், பிரசாதம் வழங்குதல். அன்னதானம் ஆகியன நடந்தன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துடியலூர் மருதாசல கவுண்டர் குடும்பத்தார் மற்றும் கற்பக விநாயகர் கோவில் நிர்வாகத்தார் செய்து இருந்தனர்.