மேலும் செய்திகள்
தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை
01-Oct-2024
கோவை : வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு, உதவித்தொகை வழங்க தமிழறிஞர்களிடமிருந்து மாவட்ட நிர்வாகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. -இது குறித்து, கலெக்டர் கிராந்தி குமார் அறிக்கை: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, முதுமைக்காலத்திலும், தமிழறிஞர்களை வறுமை தாக்காத வண்ணம் மாதந்தோறும் 3,500 ரூபாய்,- மருத்துவப்படி 500 ரூபாய் என்று 4,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. அதோடு, அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க, சலுகை வழங்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்களின் மறைவுக்குப் பின், வாரிசுகளுக்கு வாழ்நாள் முழுக்க 2,500 ரூபாய் மற்றும் மருத்துவப்படியாக 500 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், இதுவரை, 1,334 வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும், முதிர்ந்த தமிழறிஞர்களிடமிருந்து, 2024--25ம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.58 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆண்டு வருவாய் 72,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்ச்சான்று பெற்று, சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்ப்பணி மேற்கொண்டதற்கான விபரக்குறிப்பு, தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான பரிந்துரைச் சான்று இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பெற்று (www.tamilvalarchithurai.tn.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். இவற்றுடன் ஆதார்அட்டை, ரேஷன் கார்டு நகல் இணைக்க வேண்டும். கணவன் அல்லது மனைவியின் ஆதார் அட்டை நகலும் இணைக்க வேண்டும்.மகளிர் உரிமைத் தொகை, சமூகநல பாதுகாப்பு உதவித்தொகை போன்ற தமிழ்நாடு அரசின் வேறு திட்டங்களின் வாயிலாக, உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் பெறுவோர், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கக் கூடாது. இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.
01-Oct-2024