மீடியா கிரிக்கெட்; தினமலர் வெற்றி: 229 ரன்கள் குவித்து வீரர்கள் அசத்தல்
கோவை; கோவை விழாவை முன்னிட்டு நடத்தப்படும் 'மீடியா கிரிக்கெட்' போட்டியில் 'தினமலர் நாளிதழ்' அணி, 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை விழாவின், 17வது பதிப்பை முன்னிட்டு, 20 ஓவர்கள் கொண்ட 'மீடியா கிரிக்கெட்' போட்டி, கடந்த, 23ம் தேதி குமரகுரு கல்லுாரியில் துவங்கியது; டிச., 1ம் தேதி நிறைவடைகிறது. தற்போது, 'லீக்' போட்டிகள் நடந்து வரும் நிலையில் 'தினமலர்' நாளிதழ் அணி, டைம்ஸ் ஆப் இந்தியா அணியுடன் மோதியது. 'டாஸ்' வென்ற 'தினமலர்' அணியினர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர். துவக்க வீரர்களாக பிரபு, சுதர்சன் ஆகியோர் களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வீரர் பிரபு, 66 பந்துகளில், 20 பவுண்டரிகள், ஏழு சிக்சர்கள் உட்பட, 143 ரன்கள் விளாசினார். தொடர்ந்து, 20 ஓவர் முடிவில், ஐந்து விக்கெட் இழப்புக்கு, 229 ரன்களை அணியினர் குவித்தனர்.கடினமான இலக்குடன் களம் இறங்கிய டைம்ஸ் ஆப் இந்தியா அணியினர், 20 ஓவர்களில், 8 விக்கெட்களை இழந்து, 95 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 'தினமலர்' நாளிதழ் அணி, 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய 'தினமலர்' அணி வீரர் பிரபு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.