கனிம வளம் கடத்தல்; கண்காணிக்க அறிவுரை
அன்னுார்; கனிம வளம் கடத்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது. அன்னுார் தாலுகாவில், குப்பனுார், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலுார், பொகலுார் உள்ளிட்ட சில ஊராட்சிகளில், சட்டவிரோதமாக, அனுமதி இன்றி, இரவு நேரங்களில் லோடு கணக்கில் கனிம வளம் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.இதை அடுத்து சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இக்குழு பகல் மற்றும் இரவு நேரங்களில் டிப்பர் லாரிகள் மற்றும் கனிம வளம் கொண்டு செல்வதை கண்காணித்து வருகிறது. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கூட்டம் நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் யமுனா தலைமை வகித்தார். கூட்டத்தில் தலைமையிட துணை தாசில்தார் பெனசீர் பேகம், தேர்தல் துணை தாசில்தார் ஆகாஷ் குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீஸ் எஸ்.ஐ., வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.கடந்த மாதத்தில் செய்யப்பட்ட பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.'தொடர்ந்து பகல் மற்றும் இரவு நேரத்தில் கண்காணிக்க வேண்டும். விதி மீறல் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்,' என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது