புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்
சோமனூர்; கோவை மாவட்டம், சூலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ், போகம்பட்டி, சூலூர், வடவள்ளி உள்ளிட்ட, 20 க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள், தங்கள் பத்திர பரிவர்த்தனைகளை சூலூர் அலுவலகத்தில் மேற்கொண்டு வந்தனர். இதன் காரணமாக, சூலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும், என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சூலூர் அலுவலகத்தின் கீழ் இருந்த நீலம்பூர், மயிலம்பட்டி, அரசூர், கணியூர், கரவழி மாதப்பூர், ராசிபாளையம், கருமத்தம்பட்டி, சாமளாபுரம், இச்சிப்பட்டி ஆகிய கிராமங்களை பிரித்து , கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சோமனூரில் புதிய பத்திரப்பதிவு அலுவலகம் துவக்க முடிவு செய்யப்பட்டது. பழைய நகராட்சி அலுவலகத்தில், புதிய பத்திரப்பதிவு அலுவலகத்தை, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேற்று திறந்து வைத்தார். அமைச்சர் கூறுகையில், புதிய அலுவலகம் திறக்கப்பட்டதால், பத்திரப்பதிவு செய்யும் மக்களின் சிரமங்கள் குறையும். மக்களின் மேம்பாட்டுக்காக முதல்வர் கொண்டுவந்துள்ள அனைத்து திட்டங் களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, என்றார். விழாவில், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் பிரபாகர், உதவி தலைவர் சித்ரா, நகராட்சி தலைவர் மனோகரன், மாவட்ட செயலாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.