தலைமை பண்புகள் வளர்க்க மாணவர்களுக்கு அமைச்சர் பதவி
கோவை; பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்களிடம் தலைமை பண்புகளை வளர்க்கும் முயற்சியாக, கோவை காந்திமாநகர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு பல்வேறு துறைகளின் கீழ் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர் தலைவர், துணைத் தலைவர் தலைமையில், உள்துறை, விளையாட்டு, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் உணவு போன்ற துறையின் கீழ் மாணவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 'அமைச்சர்களாக' பொறுப்பேற்றுள்ள மாணவர்கள் கூறும்போது, 'அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், எங்களுக்கு பொறுப்புணர்வு அதிகரித்துள்ளது. எங்கள் துறை சார்ந்த தேவைகளையும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்' என்றனர். தலைமையாசிரியர் விஜயலட்சுமி கூறுகையில், இந்த திட்டம் மாணவர்களிடம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, உணவு இடைவேளையின் போது, சுகாதாரத் துறை அமைச்சர் மாணவர்களின் ஒழுங்குமுறையை கண்காணிப்பார். மாணவர்கள் சிதறாமல், ஒழுங்காக சாப்பிடுவதை உறுதி செய்வார். இது போன்ற முயற்சிகள் மாணவர்களிடையே பெரும் மாற்றத்தை விதைத்துள்ளன. ஒழுக்கத்துடன் செயல்படும் குணமும் மேம்பட்டுள்ளது. 'மாணிக்க மாணவர்' என்ற சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்படுவதால், மாணவர்களின் கல்வி பயணத்தோடு சேர்த்து, அவர்களின் தனிப்பட்ட குணநலன்களையும், சமூகப் பொறுப்புணர்வையும் மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது, என்றார்.