உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 13 வகை பின்னலாடைகளுக்கு எம்.ஐ.பி., நீட்டிப்பு: ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு பயன்

13 வகை பின்னலாடைகளுக்கு எம்.ஐ.பி., நீட்டிப்பு: ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு பயன்

கோவை : உள்நாட்டு ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், 13 வகையான, சாயமிடப்பட்ட பின்னலாடை ரகங்களுக்கு, குறைந்தபட்ச இறக்குமதி விலையை (எம்.ஐ.பி.,) மத்திய அரசு நீட்டித்துள்ளது.குறைந்தபட்ச இறக்குமதி விலை (எம்.ஐ.பி.,) என்பது, குறிப்பிட்ட பொருளை, அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலைக்குக் கீழாக இறக்குமதி செய்ய முடியாது. மீறி கொள்முதல் செய்தால், அதற்கு கூடுதல் வரி விதிக்கப்படும்.இந்த அடிப்படையில், ஹெச்.எஸ்., குறியீட்டின் அடிப்படையில், 13 பின்னலாடை ரகங்களுக்கு, எம்.ஐ.பி.,யை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ துணியின் குறைந்தபட்ச விலை 3.5 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் டிச., 31 வரை அமலில் இருக்கும். இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ஐ.டி.எப்.,) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது:சாயமிடப்பட்ட பின்னலாடைத் துணி ரகங்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது உள்நாட்டில் இருக்கும் ஸ்பின்னிங், நிட்டிங், பிராசசிங் மற்றும் அதைச் சார்ந்ததுறைகள் உற்பத்தி இழப்பைச் சந்திக்கின்றன.கடந்த நிதியாண்டில், 60063 மற்றும் 60069 போன்ற ஹெச்.எஸ்.என்., கொண்ட பின்னலாடை ரகங்கள், அதிகம் இறக்குமதி செய்யப்பட்டதால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதையறிந்த மத்திய அரசு, நிதியாண்டின் முடிவில், மேற்கண்ட ரகங்களுக்கு எம்.ஐ.பி., வாயிலாக வரி விதிப்பை அதிகரித்தது.இதனால், கடந்த பிப்.,ல் மட்டும் 3 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூலை மாதத்தில், 1.7 கோடி டாலர் அளவுக்கு இறக்குமதி குறைந்தது. அதேசமயம், வேறு சில ஹெச்.எஸ். குறியீடு கொண்ட பின்னலாடை ரகங்களின் இறக்குமதி அதிகரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், ஏற்கனவே இருந்த 5 ரகங்கள் உட்பட மொத்தம் 13 வகை பின்னலாடை ரகங்களுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலை (எம்.ஐ.பி.,) என்ற அடிப்படையில் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.தற்போது சீனாவில், உள்நாட்டு நுகர்வு மிகவும் குறைந்துள்ளதால், குறைந்த விலைக்கு உலகம் முழுவதும் விற்க உள்ளனர். பல நாடுகள், புது வரிகள் வாயிலாக, சீன இறக்குமதியைக் குறைக்க முயற்சி எடுத்து வருகின்றன. அந்த வகையில், இந்திய அரசு, எம்.ஐ.பி.,யை நீட்டித்துள்ளது. இதனால், 2 ஆண்டுகளாக உள்நாட்டு ஜவுளித்துறைக்கு கடும் சவாலாக இருந்த சீன இறக்குமதி வெகுவாகக் குறையும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ