டாஸ்மாக் கடை திறக்க எம்.எல்.ஏ., எதிர்ப்பு
கருமத்தம்பட்டி; சோமனூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, எம்.எல்.ஏ., மற்றும் பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.சூலூர் தாலுகாவில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட கள ஆய்வு பணி நேற்று நடந்தது. கருமத்தம்பட்டி நகராட்சியில் கலெக்டர் பவன் குமார் கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். சூலூர் எம்.எல்.ஏ., கந்தசாமி மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், சோமனூரில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்தனர்.எம்.எல்.ஏ., கூறுகையில், ஏற்கனவே சோமனூர், கருமத்தம்பட்டி பகுதியில் ஆறு டாஸ்மாக் கடைகள் மற்றும் ஒரு எப்எல்.2 பார் உள்ளன. தற்போது, சந்தை பேட்டை ரோட்டில் மேலும் ஒரு கடை திறக்க பணி நடக்கிறது. அதை உடனடியாக நிறுத்த வேண்டும். மீறி திறந்தால், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம், என்றார். மூன்று கடைகள் :
சந்தை பேட்டை சுற்று பகுதியில் ஏற்கனவே மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளன. தற்போது நான்காவது கடை திறக்க பணி நடக்கிறது. வாரச்சந்தை, சினிமா தியேட்டர், வழிபாட்டு கூடங்கள் உள்ள பகுதியில் மேலும் ஒரு கடை திறக்க உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.