ஆனைமலையில் நடமாடும் மண் பரிசோதனை முகாம்
ஆனைமலை: ஆனைமலை ஒன்றியத்தில், நடமாடும் மண்பரிசோதனை முகாம் இன்று மற்றும் நாளை முகாம் நடத்தப்படுகிறது. ஆனைமலை வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை: ஆனைமலை தாலுகா கம்பாளபட்டி, அரசூர் கிராமத்தில் இன்றும், ஆனைமலை ஒன்றிய வளாகத்தில் நாளை 12ம் தேதியும் நடமாடும் மண்பரிசோதனை முகாம் நடத்திட, கோவை மாவட்ட வேளாண் துறை திட்டமிட்டுள்ளது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி அர்த்தநாரிபாளையம், அங்கலக்குறிச்சி, மீனாட்சிபுரம், காந்தி ஆசிரமம் பகுதி வரை உள்ள அனைத்து விவசாயிகளும், மண் மாதிரிகளை வழங்கி பரிசோதனை செய்து பயன்பெறலாம். மண்ணில் உள்ள கார அமில நிலை, தழை, மணி, சாம்பல், கால்சியம், மெக்னீசியம், கந்தகம், துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் அளவுகளை தெரிந்து கொள்ளலாம்.இவற்றின் அளவை தெரிந்து பற்றாக்குறையாக உள்ள உரங்களை மட்டும் பயிருக்கு தேவையான அளவு இட்டு ரசாயன உரங்களுக்கு செலவிடும் செலவை குறைக்கலாம். இவ்வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.