உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரையாடுகளின் இனப்பெருக்க காலம்; வனத்தில் கண்காணிப்பு தீவிரம்

வரையாடுகளின் இனப்பெருக்க காலம்; வனத்தில் கண்காணிப்பு தீவிரம்

பொள்ளாச்சி; வரையாடுகளின் இனப்பெருக்க காலத்தை மையப்படுத்தி, அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 'நீலகிரிட்ராகஸ் ைஹலோக்ரியஸ்' என வகைப்படுத்தப்பட்ட, நீலகிரி வரையாடுகள், 2010ல், இயற்கை பாதுகாப்பான சர்வதேச ஒன்றியத்தால், அழிந்து வரும் உயிரினமாக வகைப்படுத்தப்பட்டது. அதன்பின், இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972, அட்டவணை 1ன் கீழ், பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டது. இவ்வகை ஆடுகள், மேற்கு தொடர்ச்சி மலையில், தமிழக, கேரள வனப்பகுதிகளில் தான் காண முடிகிறது என, வன உயிரின ஆர்வலர்கள் கூறுகின்றனர். வேட்டை, வாழ்விடங்கள் அழிப்பு போன்ற காரணங்களால், வரையாடுகளின் எண்ணிக்கை வெகுவாக சரிந்து வருவதும் தெரியவந்தது. இந்நிலையில், கடந்த, 2022ல், தமிழக அரசு, 25 கோடி ரூபாயில், நீலகிரி வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரையாடுகளின் வாழ்விடங்கள் அடையாளம் காணப்பட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில், தமிழகத்திற்கு உட்பட்ட நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான, 140 இடங்களில், 1,031 வரையாடுகள், இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வரையாடுகள், ஆண்டுதோறும் ஜூன், ஜூலையில் இருந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும். அதற்கடுத்த பிப்ரவரி முதல் மார்ச் இறுதி வரை பிரசவ காலமாகும். இதனால், பொள்ளாச்சி அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலையில், வனத்துறையால் வரையாடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 'வரையாடுகளின் வாழ்விடங்கள் கண்டறியப்பட்டு, வேட்டைதடுப்பு காவலர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அவற்றுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் கண்காணித்து, அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை