அரசு பள்ளி வளாகத்தில் குரங்குகள் அட்டகாசம்
அன்னுார்: குரங்குகள் அச்சுறுத்தல் காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என தெற்கு துவக்க பள்ளி மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர். அன்னுார் தெற்கு துவக்க பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்திலும் பள்ளியைச் சுற்றிலும் அதிக அளவு குரங்குகள் உள்ளன. நேற்று முன்தினம் வந்த குரங்குகள் ஒரு மாணவியின் கையில் இருந்த தின்பண்டத்தை பறித்து சென்றன. இதனால் அச்சமடைந்த மாணவ மாணவியர் அலறி அடித்து ஓடினர். குரங்குகளை விரட்ட முயன்ற பெற்றோரையும் குரங்குகள் அச்சுறுத்தின. இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் சிலர், பள்ளி தலைமையாசிரியை ஜீவலதாவிடம், 'இரு மாதங்களுக்கு முன் ஒரு குழந்தையை குரங்கு கடித்து விட்டது. தற்போதும் குழந்தைகளையும் பெற்றோரையும் அச்சுறுத்துகிறது.வருகிற 2ம் தேதிக்குள் குரங்குகளை கட்டுப்படுத்தாவிட்டால், வரும் 3ம் தேதி முதல் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்,' என்றனர். தகவல் அறிந்து வன காவலர் நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், துணைத் தலைவர் விஜயகுமார், கவுன்சிலர் கார்த்திகேயன் அங்கு சென்றனர். வனக்காவலரிடம் பொதுமக்கள் கூறுகையில், 'அரசு மருத்துவமனையில் கூண்டு வைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஒரு முறை கூட குரங்கு பிடிபடவில்லை. கூண்டு வைத்தால் குரங்குகள் பிடிபடாது. மயக்க ஊசி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 3ம் தேதி முதல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்,' என்றனர். வட்டார கல்வி அலுவலர் இருதய மரிய ஜோசப் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பெற்றோரை சமாதானப்படுத்தினார்.