பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; தீயணைப்பு துறையினர் செயல்விளக்கம்
வால்பாறை; தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் மழை கால முன்னெச்சரிக்கை குறித்து,பள்ளி மாணவர்களுக்கு செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. வால்பாறையில், தற்போது தென்மேற்குப் பருவமழை விடைபெறவுள்ள நிலையில், வடகிழக்குப்பருவ மழை துவங்கவுள்ளது. இதனையடுத்து மழை காலத்தில் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்வது எப்படி என, தீயணைப்புத்துறை சார்பில் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் நடந்த செயல்விளக்க நிகழ்ச்சியை தாசில்தார் அருள்முருகன் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், தீயணைப்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில், மழை காலத்தில் ஏற்படும் பாதிப்புக்களை தடுப்பது குறித்து, சுற்றுலா பயணியர் மத்தியில் தீயணைப்புத்துறை வீரர்கள் பேசினர். தொடர்ந்து, தீயணைப்பு துறை வீரர்கள் மழை வெள்ளத்தில் ஒருவர் அடித்து செல்லப்பட்டால் பத்திரமாக மீட்பது குறித்தும், ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக மீட்பது குறித்தும், விபத்தின் போது எப்படி முதலுதவி செய்வது எனவும் செயல்விளக்கம் அளித்தனர். வால்பாறை தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: கனமழையின் போது ஆற்றோரப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.இடியுடன் மழை பெய்யும் போது, மின்சாரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணியர் ஆற்றில் ஆழம் தெரியாமலும், நீச்சல் தெரியாமலும் குளிக்க வேண்டாம். மழை வெள்ளத்தில் அடித்து செல்பவர்களை மீட்க எந்த நேரத்திலும், தீயணைப்பு துறையினரை அழைக்கலாம். இடி, மின்னலின் போது மொபைல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மழை காலங்களில் குழந்தைகள் நீர்நிலைகளுக்கு அருகில் செல்லாமல் பாதுகாத்துக் கொள்வது அவசியம். இவ்வாறு, பேசினர்.