முடீஸ் ரோட்டை விரிவுபடுத்துங்க: வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை
வால்பாறை: முடீஸ் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறையில் நகரில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது முடீஸ் பஜார். கடந்த பல ஆண்டுகளாக இந்த ரோடு சீரமைக்கப்படாமல் இருந்தது. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சித்திவிநாயகர் கோவிலிலிருந்து முடீஸ் பஜார் வரை நகராட்சி சார்பில் ரோடு போடப்பட்டது. இந்நிலையில், முடீஸ் ரோடு குறுகலாக இருப்பதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சுற்றுலாவாகனங்கள் அதிக அளவில் இந்த ரோட்டில் செல்வதால், அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இது வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'சோலையாறு சித்திவிநாயகர் கோவிலில் இருந்து, முடீஸ் பஜார் வரை ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் விபத்துள்ளாகிறது. யானைகள் நடமாட்டம் மிகுந்த இந்த ரோட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே வாகனங்கள் இடையூறு இல்லாமலும், விபத்து ஏற்படாமலும் செல்ல, முடீஸ் ரோட்டை நகராட்சி சார்பில் உடனடியாக விரிவுபடுத்த வேண்டும்' என்றனர்.