குறுகிய ரோட்டை விரிவுபடுத்த வாகன ஓட்டுநர்கள் எதிர்பார்ப்பு
வால்பாறை: வால்பாறையில் குறுகலான ரோட்டை விரிவுபடுத்த வேண்டும் என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். வால்பாறை நகரிலிருந்து சோலையாறுடேம் வரையிலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோடு பராமரிக்கப்படுகிறது. இந்த ரோட்டில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கேரள மாநில எல்லையில் வால்பாறை அமைந்துள்ளதால், இருமாநில வாகனங்கள் அதிக அளவில் இவ்வழித்தடத்தில் சென்று வருகின்றன. இந்நிலையில், வால்பாறை - சோலையாறு அணை செல்லும் ரோட்டில் பல்வேறு இடங்களில் ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, ஸ்டேன்மோர், பழைய வால்பாறை, உருளிக்கல் உள்ளிட்ட பகுதியில் உள்ள வளைவுகள் மிகவும் குறுகலாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'வால்பாறை மலைப்பாதையில் விபத்துக்களை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஒவ்வொரு கொண்டைஊசி வளைவுகளிலும் குவி கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், சமீப காலமாக விபத்துக்கள் குறைந்துள்ளன. ஆனால், வால்பாறை - சோலையாறு அணை செல்லும் ரோடு பல இடங்களில் விரிவுபடுத்தாமல் குறுகலாக உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதை தடுக்க குறுகலான வளைவுகளை விரிவுபடுத்தி, அந்த இடத்தில் விபத்து ஏற்படாமல் தவிர்க்க குவி கண்ணாடிகள் பொருத்த வேண்டும்,' என்றனர்.