சுரங்கப்பாதையில் மழைநீர் வாகன ஓட்டிகள் அவதி
மேட்டுப்பாளையம்; காரமடை ரயில்வே சுரங்க பாதையில், அண்மையில் பெய்த மழையினால் மழை நீர் தேங்கியுள்ளது. கோவை மாவட்டம் காரமடையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் இருசக்கர வாகனங்கள் மற்றும் மேம்பாலத்திற்கு அருகே உள்ள ராமசாமி சந்து, அண்ணா நகர், உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் வசித்து வரும் மக்கள் நடந்து செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில், மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் சுரங்கப்பாதையில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்றதாததால், பொதுமக்கள் சுரங்க பாதையின் மேல் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களை கடந்து செல்கின்றனர். ரயில் விபத்து எதுவும் ஏற்படும் முன் சுரங்க பாதையில் உள்ள மழைநீரை அகற்ற காரமடை நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-------