சேறும், சகதியுமான ரோடு; மக்கள் அவதி
சூலுார்; நடக்க கூட முடியாமல், சேறும், சகதியுமாக ரோடு இருப்பதால், கங்கா நகர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சூலுார் அடுத்துள்ள பட்டணம் ஊராட்சிக்கு உட்பட்டது கங்கா நகர் மற்றும் காவேரி நகர். இங்கு, ஏராளமான வீடுகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், இந்த நகர்களுக்கு செல்லும் ரோடு, மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியது. இதனால், அப்பகுதி மக்கள் நடக்க கூட முடியாத அளவுக்கு அவதிக்குள்ளாகி உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் நகருக்கு செல்லும் ரோடு மழையால் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. ரோடு போட வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. நடந்து சென்றாலோ, இரு சக்கர வாகனத்தில் சென்றாலோ வழுக்கி விழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், குழந்தைகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.எங்கள் எதிர்ப்பை தெரிவிக்க ரோட்டில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஊராட்சி நிர்வாகம் உடனடியாக ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.