ஊதிய முரண்பாடு களைய வேண்டும்: பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் கோரிக்கை
கோவை: பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் மேம்பாட்டு சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தலைமையிலா பணியாளர்கள் கலெக்டர் பவன் குமாரிடம் சமர்ப்பித்த மனு: கோவை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு வெவ்வேறு அளவுகளில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதன்படி மாநகராட்சி பகுதியில் பணிபுரிபவர்களுக்கு ரூ.770, நகராட்சி பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.655, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு ரூ.578 ஒரு நாள் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை உயர்த்தி வழங்க. பல ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பிற மாவட்டங்களில் எவ்வித ஊதிய வேறுபாடும் இன்றி ஒரே மாதிரியாக ரூ.810 வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கும் ஒரே ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.770 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கிராமங்களிலும், பேரூராட்சிகளிலும் பணிபுரிவர்களுக்கு 8 ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு ஒரு நாள் ஊதியமாக ரூ. 586 வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். ஆகவே எங்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.