சொத்துவரி பெயர் மாற்ற லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட்
பொள்ளாச்சி; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய நகராட்சி வருவாய் ஆய்வாளரை, 'சஸ்பெண்ட்' செய்து நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தின் கீழ் பகுதியில், சொத்து வரி பெயர் மாற்றத்துக்காக, ஒருவரிடம், நகராட்சி வருவாய் ஆய்வாளர் கொங்குராஜ், 10 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்சம்பவம் குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இது குறித்து விசாரணை செய்த நகராட்சி கமிஷனர் கணேசன், வருவாய் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.நகராட்சி கமிஷனர் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சி வருவாய் ஆய்வாளர் கொங்குராஜ் மீது, கையூட்டு புகார் பெறப்பட்டதையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதிகளின் கீழ், சம்பந்தப்பட்ட பணியாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.இதே போன்று, வேறொரு குற்றச்சாட்டுக்காக இளநிலை உதவியாளர் தனிஷ் என்பவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். புகார்கள் பெறப்பட்டதும், நகராட்சி நிர்வாகம் இதுபோன்று கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.எனவே, இந்நிகழ்வு போன்று இல்லாமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தொகையை நகராட்சி அலுவலக கருவூலத்தில் நேரடியாக செலுத்த வேண்டும்.கட்டணத்தை விட கூடுதலாக யாரும் நேரடியாக வழங்க முன்வரக்கூடாது.இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும், இது போன்று புகார்கள் எழும்பட்சத்தில் நகராட்சி கமிஷனரை நேரடியாக சந்தித்து மக்கள் புகார் அளிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.