உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதுமலையில் தொடரும் செந்நாய் மர்ம மரணங்கள்! வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் அதிருப்தி

முதுமலையில் தொடரும் செந்நாய் மர்ம மரணங்கள்! வனவிலங்கு ஆர்வலர்கள் கடும் அதிருப்தி

கூடலுார்: முதுமலை அருகே விஷம் வைத்தும், மர்மமான முறையில் செந்நாய்கள் உயிரிழந்து வருவது, வனவிலங்கு ஆர்வலர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.வன சூழலில் வாழ்கின்ற உயிரினங்களுக்கு இடையே, உணவு சங்கிலியில் சரிநிகராக தொடர்பு இருப்பதன் மூலம், வனச்சுழல் பாதுகாக்கப்படுகிறது. வனத்தில், தாவர உண்ணிகள் தாவரங்களின் வளர்ச்சியையும்; மாமிச உணவுகள் தாவர உண்ணிகள் பெருக்கத்தையும் ஒன்றுக்கு ஒன்று கட்டுப்படுத்தி வருவதும் சுழற்சி முறையில் நடந்து வருகிறது.

உணவுச்சங்கிலி பாதிப்பு

குறிப்பாக, மாமிச உண்ணிகளான புலி, சிறுத்தை, செந்நாய், கழுதைப்புலி ஆகியவை தாவர உண்ணிகள் பெருக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க காரணமாக உள்ளது. இவைகள் இறப்பதன் மூலம், தாவர உண்ணிகள் அதிகரித்து உணவுச்சங்கிலி பாதிக்கப்படும். இதன் காரணமாக, மாமிச உண்ணிகளை பாதுகாப்பது அவசியமாக உள்ளது.இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி சீகூர் வனப்பகுதியில், இரண்டு மாதங்களில், மூன்று செந்தாய்கள் உயிரிழந்துள்ளன. அதில், இரண்டு விஷம் வைத்து கொல்லப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொன்று, உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது. பிரேத பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை.நமது உணவுச் சங்கிலியில் முக்கிய பங்காற்றி வரும், செந்நாய்கள் உயிரிழப்பும்; இதனை தடுக்க வனத்துறையின் ஆர்வம் காட்டாமல் உள்ளதும், வன ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'பிரகர்தி' அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுகுமாரன் கூறுகையில், ''வனத்தில் உணவு சங்கிலி பாதுகாப்பதில், செந்நாய் உள்ளிட்ட மாமிச உண்ணிகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. மசினகுடி பகுதியில் புல்வெளிகள் அழிக்கப்படுவதாலும், வனத்தில் இவைகளின் முக்கியத்துவம் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு, இல்லாததாலும் செந்நாய் உயிரிழப்புக்கு காரணமாகிறது. கடந்த காலங்களில் அதிக அளவில் நாட்டு மாடுகள் இருந்ததால், அவைகளை மாமிச உண்ணிகள் வேட்டையாடி சென்றாலும், மக்கள் பெரிதாக கவலைப்படுவதில்லை. அந்த சூழல் தற்போது மாறியதால், உணவு சங்கிலிக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. வனப்பாதுகாப்பில் செந்நாய்களின் பங்கு; அதனை பாதுகாப்பது அவசியம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.முதுமலை துணை இயக்குனர் அருண்குமார் கூறுகையில்,''செந்நாய்கள் வனப்பகுதியில் ஏன் இருக்க வேண்டும் என்பது குறித்தும்; பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் கிராமங்களில் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ