தேசிய பில்லியர்ட்ஸ் போட்டி; ஜொலிக்கிறார் தங்க மாணவி
கோவை; மத்திய பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் போட்டியில், கோவை வீராங்கனை தங்கம் வென்று, பெருமை சேர்த்துள்ளார்.பில்லியர்ட்ஸ் அண்ட் ஸ்னுாக்கர் பெடரேஷன் ஆப் இந்தியா மற்றும் மத்திய பிரதேசம் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் சங்கம் சார்பில், தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் போட்டி, கடந்த ஜன.,7 தேதி முதல் பிப்., 10ம் தேதி வரை, இந்துாரில் நடந்தது.இதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, கோவா, அசாம், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ., பயிலும் சிநேந்ரா, தமிழகம் சார்பில் கலந்து கொண்டார்.இவர், 21 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான பில்லியர்ட்ஸ் பிரிவில், தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். ஏற்கனவே, இவர் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது. பயிற்சியாளர்கள் பிரேம் பிரகாஷ், நவீன் மற்றும் கல்லுாரி நிர்வாகத்தினர், மாணவியை பாராட்டினர்.