வேளாண் பல்கலைக்கு தேசிய நீர் விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
கோவை: மத்திய அரசின் சிறந்த நிறுவனத்துக்கான தேசிய நீர் விருது, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு வழங்கப்பட்டது.மத்திய அரசின் ஜல் சக்தி துறை சார்பில், தேசிய நீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023ம் ஆண்டுக்கான 5வது தேசிய நீர் விருது பெற்றவர்களின் பட்டியலை, மத்திய அமைச்சர் படேல் கடந்த, 14ம் தேதி வெளியிட்டார்.சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம ஊராட்சி, சிறந்த நகர உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி, கல்லுாரி, சிறந்த நிறுவனம் (பள்ளி, கல்லுாரி அல்லாதவை), சிறந்த சமுதாய சங்கம் ஆகிய, 9 பிரிவுகளில், 38 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நிறுவனம் (பள்ளி, கல்லுாரி அல்லாதவை) பிரிவில், தமிழ்நாடு வேளாண் பல்கலை தேசிய நீர் விருதில் முதலிடம் பிடித்தது. டில்லியில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பொறியியல் துறை பேராசிரியர் ரவிராஜ் ஆகியோர் விருதை பெற்றனர். விருதுடன் பாராட்டு பத்திரம், கோப்பை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் வழங்கப்பட்டது.