மக்கும் குப்பையில் தயாரிக்கப்படும் இயற்கை உரம் இலவசம்! விவசாயிகள் பயன்பெற அழைப்பு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியில், நான்கு உரமாக்கல் மையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கும் குப்பையில் தயாரிக்கப்படும் இயற்கை உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.பொள்ளாச்சி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அவ்வகையில், மக்கும் குப்பையில் இருந்து, உரம் தயாரிப்பதற்கு ஏதுவாக சுதர்சன் நகர், வடுகபாளையம், அழகாபுரி, ஜோதிநகர் உள்ளிட்ட நான்கு இடங்களில் உரமாக்கல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, பழ குடோன்களிலிருந்து கிடைக்கும் பழங்களின் கழிவுகள், வீடுகளில் இருந்து கிடைக்கும் காய்கறி மற்றும் உணவுக் கழிவுகள் ஆகியவற்றுடன், சாணம் சேர்த்து, 45 நாட்களுக்கு ஈரப்பதத்துடன் தண்ணீர் தெளித்து பதப்படுத்தப்படுகிறது. அதன்வாயிலாக, கிடைக்கும் இயற்கை உரம், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.அவ்வகையில், வழக்கத்துக்கு மாறாக, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 25 டன் குப்பை சேகரமாகும் நிலையில், 13 முதல் 14 டன் அளவிலான மக்கும் குப்பையில் இருந்து, 2 டன் வரை, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.நகராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது:நகராட்சியில், தினமும், 25 டன் குப்பை சேகரிக்கப்படுகின்றன. 120 துாய்மைப் பணியாளர்கள், வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து குப்பையை சேகரம் செய்து வருகின்றனர். உரமாக்கல் மையத்தில், தலா, 5 பேர் வீதம், 20 பேர், இயற்கை உரம் தயாரிக்க பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகை பிரித்து, துாய்மைப் பணியாளர்கள், உரமாக்கல் மையத்தில் ஒப்படைக்கின்றனர். தினமும், 14 டன் மக்கும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.அதேநேரம், சேகரமாகும் மொத்த குப்பையில், மறு சுழற்சிக்கு பயன்படும் பாட்டில், அட்டை உள்ளிட்டவை, 2 டன் வரை பிரித்தெடுக்கப்படுகிறது. அதனை, அந்தந்த நிறுவனத்தினரிடம் ஒப்படைத்து, துாய்மைப் பணியாளர்கள் வருவாய் பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.அதேபோல, உணவகங்கள் வாயிலாக சேகரமாகும், 3 டன் காய்கறி மற்றும் உணவுக் கழிவுகளை, பன்றி வளர்ப்பவர்கள் எடுத்துச் செல்கின்றனர். எட்டு டன் வரையிலான பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.அதாவது, ஆயிரம் முதல் இரண்டாயிரம் டன் வரையிலான பிளாஸ்டிக் கழிவு சேகரித்து, தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, இயற்கை உரங்கள், அந்தந்த உரமாக்கல் மையங்களில் இருப்பு வைக்கப்படுவதால், விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் இயற்கை உரத்தை இலவசமாக வாங்கிச் செல்லலாம்.இவ்வாறு, கூறினர்.