நீலாம்பூர் - வாளையார் வரையிலான புறவழிச்சாலை; தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு கடிதம்
கோவை; கோவை, காந்திபுரத்தில் நுாலக கட்டுமான பணியை, தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, நேற்று ஆய்வு செய்து, 2026 ஜன., மாதத்துக்குள் பணிகளை முடிப்பது தொடர்பாக, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் ஆலோசித்தார்.அதன்பின், அமைச்சர் வேலு நிருபர்களிடம் கூறியதாவது:கோவையில் ரூ.300 கோடியில் நுாலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டப்படுகிறது; இரண்டு தளங்கள் வரை 'எஸ்கலேட்டர்', மற்ற தளங்களுக்கு செல்ல, நான்கு 'லிப்ட்' வசதி செய்யப்படும்.ஒரே நேரத்தில், 300 பேர் அமரும் வகையில் கலையரங்கம் கட்டப்படும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் தமிழுக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும். நீலாம்பூர் முதல் வாளையாறு வரையிலான புறவழிச்சாலை ஒப்படைப்பது குறித்து, எல் அண்டு டி நிறுவனத்திடம் தமிழக அரசு பேச்சு நடத்தியது; முதலில், கொடுக்க மறுத்தார்கள். மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து கடிதம் கொடுத்தோம்.எனது பார்வைக்கு கோப்பு வந்ததும் ஒப்புதல் வழங்கினேன். அதன் பிறகே சாலையை ஒப்படைக்க அந்நிறுவனம் ஒத்துக்கொண்டது. சாலையை எடுப்பதற்கு, 199 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.அச்சாலையை தமிழக அரசிடம் ஒப்படைக்கக்கோரி, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆறு வழிச்சாலையாக விஸ்தரிக்க முடிவெடுத்திருக்கிறோம். மத்திய அரசே அவ்வேலையை செய்வதாக இருந்தால், மாநில அரசு அவ்வப்போது ஆய்வு செய்யும்.மேற்குப்புறவழிச்சாலை பணி மூன்று கட்டமாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்டத்துக்கு, 98 சதவீதம் நிலம் கையகப்படுத்தி விட்டோம்; மூன்றாம் கட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது; அவ்வேலையை முடித்த பிறகே கிழக்குப்புறவழிச்சாலை பணியை எடுக்க முடியும்.அவிநாசி ரோடு மேம்பாலத்தில் ஹோப் காலேஜ் பகுதியில் ஓடுதளம் அமைக்க 'கர்டர்'கள் தயாராக இருக்கின்றன. ரயில்வே அதிகாரிகள் இன்னும் தடையின்மை சான்று வழங்கவில்லை. குறிப்பிட்ட தேதியில் சான்று கொடுத்திருந்தால், இம்மாதமே பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம்.இதுதொடர்பாக, வரும் திங்கட்கிழமை சென்னையில் நெடுஞ்சாலைத்துறை, ஒப்பந்ததாரர் ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. நீலாம்பூர் வரை மேம்பாலம் கட்ட இந்நிதியாண்டில் திட்ட அறிக்கை தயாரித்து, ஒப்பந்தம் கோரப்படும்.விளாங்குறிச்சி ரோடு - தண்ணீர் பந்தல் மேம்பாலம், நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே மேம்பால பணிகள் தொடர்பாக, அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.