உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழில் உரிமம் பெறுவதில் அலட்சியம்; நகராட்சி நிர்வாக நடவடிக்கை தேவை

தொழில் உரிமம் பெறுவதில் அலட்சியம்; நகராட்சி நிர்வாக நடவடிக்கை தேவை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில், வரைமுறையின்றி தொழில்கள் பெருகினாலும், நகராட்சி வாயிலாக தொழில் உரிமம் பெறுவதில் அலட்சியம் காட்டுவதாக, புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதி 2023-ன் படி, தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்ப, அரசே தொழில் உரிம கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதன்படி, நகராட்சிகளுக்கு குறைந்தபட்சம், 700 ரூபாய், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய்; பேரூராட்சிகளுக்கு குறைந்தபட்சம், 500 ரூபாய், அதிகபட்சமாக 7,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர், வியாபாரிகள், வர்த்தக அமைப்பு பிரதிநிதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு மாதம் முன்னரே விண்ணப்பித்து, உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், பொள்ளாச்சி நகராட்சி உட்பட்ட பகுதிகளில், புதிது புதிதாக கடைகள் துவக்ககப்பட்டாலும், அதற்கான தொழில் உரிமம் பெறுவதில் அலட்சியப் போக்கு தொடர்கிறது. வரைமுறையின்றி தொழில்கள் நடத்தப்பட்டு வந்தாலும் தொழில் உரிமத்திற்கான கட்டணம் செலுத்தப்படாததால், நகராட்சிக்கு வர வேண்டிய வருவாய் பாதிக்கப்படுகிறது. நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தற்போது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு பிராணிகள், பறவைகள் கடைகள், அமர்ந்து சாப்பிடக்கூடிய டீ கடை, ஓட்டல், கேண்டீன், பாஸ்ட்புட், ரெஸ்டாரன்ட் என பல்வேறு விதமான வணிக கடைகள் துவக்கப்படுகிறது. ஆனால், அதிகப்படியானவர்கள் முறையான அனுமதி பெறவில்லை. இது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அலட்சியப்போக்கு தொடர்கிறது. நிரந்தர கட்டடத்தில் தொழில் நடத்துவோர், நகராட்சி வாயிலாக தொழில் உரிமம் பெறுவது கட்டாயமாகும். பல ஆண்டுகளாக தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் மட்டுமே முறையாக உரிமம் கட்டணம் செலுத்துகின்றனர். மற்றவர்களும் தொழில் உரிமம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ