நெல்லியாம்பதி பள்ளிகளுக்கு புகையிலை இல்லா விருது
பாலக்காடு : நெல்லியாம்பதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட சுகாதார துறையின் புகையிலை இல்லா அங்கீகாரம் விருது வழங்கப்பட்டுள்ளது.வன எல்லையோர பகுதியான நெல்லியாம்பதியில், சுகாதார செயல்களை சிறந்த முறையில் செய்யும் ஆரம்ப சுகாதார மையத்தை பாராட்டி விருது கிடைத்துள்ளது.பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், பாலக்காடு மாவட்ட மருத்துவ அதிகாரி வித்யாவிடம் இருந்து இந்த விருதினை, நெல்லியம்பதி ஆரம்ப சுகாதார மைய மருத்துவ அதிகாரி லட்சுமி மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் ஜோய்சன் பெற்றுக்கொண்டனர்.இதுகுறித்து, சுகாதார ஆய்வாளர் ஆரோக்கியம் ஜோய்சன் கூறியதாவது:கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது நெல்லியாம்பதி. வன எல்லையோர பகுதியான இங்கு நான்கு அரசு பள்ளிகள் உள்ளன.இந்தப் பள்ளிகள்,தேசிய புகையிலை கட்டுப்பாடு நிகழ்ச்சியின் பகுதியாக ,மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றியதற்கு இந்தஅங்கீகார விருது கிடைத்துள்ளது.ஊராட்சி, போலீஸ், ஆரம்ப சுகாதார மையம், சுகாதார பணியாளர்கள், பள்ளி பிரதிநிதிகள், மாணவர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் தான் இந்த விருது கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.