சுகாதாரத்துறை வழங்கும் புதுயுகம் நாப்கின்; தரமின்றி இருப்பதால் பயன்படுத்த தயக்கம்
கோவை; தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை செயல்படுத்தும் 'புதுயுகம்' திட்டத்தின் கீழ் பள்ளி மாணவியருக்கு வழங்கும் நாப்கின்கள் தரமின்றி இருப்பதால், பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவியர், மாதவிடாய் சமயத்தில் சுகாதாரத்தை பேணிக் காக்க, தமிழக அரசு சார்பில், 2011 முதல் புதுயுகம் என்ற பெயரில் இலவசமாக நாப்கின் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும், ஏப்., ஜூன், ஆக., அக்., டிச., பிப்., ஆகிய ஆறு மாதங்கள் நாப்கின் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும், 6 நாப்கின் அடங்கிய மூன்று பாக்கெட்கள் வழங்கப்படும். இத்திட்டம் பொது சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. நாப்கின் அளவு மிகவும் சிறியதாக இருப்பதாலும், அதற்கு பயன்படுத்தப்படும் பஞ்சு அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், மாணவியரால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கிராமப்புற சுகாதார செவிலியர்கள் சிலர் கூறுகையில், '10 ஆண்டுகளுக்கு முன் நாப்கின் சைஸ், அதன் தடிமன் நன்றாக இருந்தது. தற்போது வழங்கும் நாப்கின் நீளம், அகலம் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு பயன்படுத்தும் பஞ்சு அளவும் குறைக்கப்பட்டுள்ளதால், 4 மணி நேரம் கூட தாங்குவது இல்லை. ஒரு பாக்கெட்டில் ஆறு நாப்கின் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு சேர்த்து மூன்று பாக்கெட் ஒரு மாணவிக்கு வழங்கப்படுகிறது' என்றனர். பள்ளி மாணவியர் கூறுகையில், 'பள்ளியில் தரும் நாப்கின் பயன்படுத்த முடியவில்லை; மூன்று நாப்கின் சேர்த்து பயன்படுத்தினால் கூட தாங்குவது இல்லை' என்றனர்.