நுாலகத்துக்கு வந்தாச்சு புதுப்புத்தகங்கள்
கோவை; கோவை ஆர்.எஸ்.புரத்தில் செயல்படும் மாவட்ட மைய நுாலகம், 50 லட்சத்தில் புதுப்பிக்கப்படுகிறது. நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் படிக்க தனிப்பிரிவு, கதை, கவிதைகள், கட்டுரை நுால்கள் படிக்க தனிப்பிரிவு, ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். மற்றும் போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு தனிப்பிரிவு செயல்படுகிறது. தினமும், 600 முதல், 800 வாசகர்கள் வரை வருகின்றனர். மூன்றாண்டுக்கு பின், இரண்டு லட்சம் ரூபாய்க்கு புதுப்புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் (பொறுப்பு) ராஜேந்திரன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நுாலகங்களையும் புதுப்பித்து, வாசகர்களுக்கு தேவையான புதிய நுால்கள் வாங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முழு நேரமாக செயல்படும் நுாலகங்கள் புதுப்பிக்கப்படுகின்றன. மாவட்ட மைய நுாலக பின்புற சுவர்களில் பெயின்ட் பூசும் பணி ஒரு வாரத்தில் முடிந்து விடும். கோவையில் உள்ள, 191 நுாலகங்களுக்கும் புதிய நுால்கள் வாங்கப்பட்டுள்ளன. மாவட்ட மைய நுாலகத்துக்கு 2 லட்சம் ரூபாய்க்கும், முழுநேர நுாலகங்களுக்கு, 1.50 லட்சம் ரூபாய்க்கும், கிராமப்புற நுாலகங்களுக்கு, 75 ரூபாய்க்கும் ஆர்டர் கொடுக்கப்பட்டது. முதல் கட்டடமாக, 448 பண்டல்கள் வந்துள்ளன. மீதமுள்ள நுால்கள் இந்த வார இறுதிக்குள் வந்து விடும். இவ்வாறு, கூறினார்.