மேலும் செய்திகள்
மனை விற்பனை நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
29-Apr-2025
கோவை; புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பழுதானதால், ரூ.1.32 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, சலிவன்வீதியை சேர்ந்தவர் சுதர்சன்; இவர், பெங்களூரு, கோரமங்களாவை தலைமையிடமாக கொண்ட ஓலா நிறுவனம் தயாரித்த, எலக்டரிக் ஸ்கூட்டரை, மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள விற்பனை நிறுவனத்தில், கடந்த 2024, ஏப்., 24ல், ரூ.1.17 லட்சம் செலுத்தி வாங்கினார். புதிய ஸ்கூட்டர் வாங்கி ஓட்டி சென்ற போது, 200 மீட்டர் துாரத்திலேயே நடுரோட்டில் நின்றது. இதனால் பழுது நீக்கி தருமாறு சர்வீஸ் சென்டருக்கு ஸ்கூட்டரை கொண்டு சென்றார். 10 நாட்களுக்கு பிறகு, பழுது நீக்கப்பட்டதாக கூறி ஸ்கூட்டரை திரும்ப ஒப்படைத்தனர்.மீண்டும் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து சிறிது துாரத்திற்கு சென்ற போது பழுதாகி நின்றது. அடிக்கடி பழுதானதால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். வேறு ஸ்கூட்டர் மாற்றி தருமாறு கோரியும், ஓலா நிறுவனம் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஸ்கூட்டருக்கு செலுத்திய பணம் முழுவதையும் திரும்பி தருமாறு நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் அளிக்காமல் இழுத்தடிப்பு செய்தனர். இதனால் இழப்பீடு வழங்க கோரி, வக்கீல் ஜெரோம் ஜோசப் வாயிலாக கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ''எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், ஸ்கூட்டருக்கு பெற்ற தொகை, 1.17 லட்சம் ரூபாயை திருப்பி கொடுப்பதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.
29-Apr-2025