புதிய நுாலக கட்டடம்: வாசகர்கள் மகிழ்ச்சி
மேட்டுப்பாளையம் : சிறுமுகை கிளை நுாலகத்தில், புதிதாக கட்டிய கட்டடம் திறந்ததை அடுத்து வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறுமுகை அண்ணாநகரில் கிளை நூலகம் உள்ளது. இதில், 5,600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 67 புரவலர்களும் உள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளன. தினமும், 70க்கும் மேற்பட்டவர்கள் நூலகத்துக்கு வந்து படித்தும், புத்தகங்களை எடுத்தும் செல்கின்றனர். இங்கு இணையதள வசதி, போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளதால், இளைஞர்கள் அதிக அளவில் வந்து தேர்வுக்கு படித்து வருகின்றனர். கூடுதல் கட்டடம் கட்டும் படி, வாசகர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் நிதியிலிருந்து, 22 லட்சம் ரூபாய் செலவில் புதிய கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிதாக மேஜைகள், இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இந்த கிளை நூலக கட்டடத்தை, காணொலி காட்சி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய கட்டடம் திறந்ததை அடுத்து, வாசகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.