என்.எம்.எம்.எஸ். மாணவர் விபரம் பதிவேற்றம் முடக்கம்
கோவை : பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு ஸ்காலர்ஷிப் வழங்கும் மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், 9 முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகையாக பெறுகின்றனர். 2024-25 கல்வியாண்டில், மாநிலம் முழுவதும் 6,695 மாணவர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்கள், போன்ற 75 சதவீத பணிகளை ஜூன் மாதத்திற்குள்ளும், 100 சதவீத பணிகளை ஜூலை 15க்குள்ளும் முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் 1,072 மாணவர்களின் விபரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற 229 மாணவர்களில், 90க்கும் மேற்பட்ட மாணவர்களின் விபரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் 12,984 மாணவர்களில், 7,115 மாணவர்களின் விவரங்கள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. கோவையில் 282 மாணவர்களின் விபரங்கள் புதுப்பிக்கப்படவில்லை என தெரியவருகிறது. இதனால், உதவித்தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, இந்த பணிகளை விரைந்து முடிக்க, பள்ளிக்கல்வி இணை இயக்குனரக அலுவலகத்திற்கு, கண்காணிப்பாளர் மற்றும் நேர்முக உதவியாளர் ஆகியோர் நேரில் சென்று அனைத்து பணிகளையும் உடனடியாக முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.