உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! நகராட்சியில் இன்று ரகசிய வாக்கெடுப்பு

தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! நகராட்சியில் இன்று ரகசிய வாக்கெடுப்பு

வால்பாறை; வால்பாறை நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இன்று (7ம் தேதி) ரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது. வால்பாறை நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இதில், 19 வார்டுகள் தி.மு.க., வசமும், அ.தி.மு.க., வி.சி., வசம் தலா ஒரு வார்டும் உள்ளன. நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த அழகுசுந்தரவள்ளி உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே நகராட்சி தலைவருக்கும், கவுன்சிலர்களுக்கும் இடையே வார்டுகளில் வளர்ச்சிப்பணிகள் நடைபெறுவதில் மோதல் இருந்து வருகிறது. கவுன்சிலர்கள் போராட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக நகராட்சி கூட்டமும் நடக்கவில்லை. நகராட்சியில் கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றாததால், வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது பாதித்தது. இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே, ஆளும்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், 'நகராட்சியில் வளர்ச்சி பணி என்ற பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்' என, கமிஷனரிடம் மனு கொடுத்தனர். அதன் அடிப்படையில் இன்று 7ம் தேதி காலை தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் வகையில் நகராட்சி அரங்கில் ரகசிய வாக்கெடுப்பு நடக்கிறது. நகராட்சி கமிஷனர்(பொ) கணேசன் கூறியதாவது: கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று, இன்று காலை, 11:00 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர மொத்தம், 13 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட மனு வழங்க வேண்டும். அதன் அடிப்படையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில், 17 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தீர்மானம் நிறைவேற்றினால், தலைவர் பதவி விலக நேரிடும். கவுன்சிலர்களின் ரகசிய வாக்கெடுப்பின் அடிப்படையில், நகராட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும். இவை அனைத்தும் நகராட்சி சட்ட விதிகளின் படி தான் நடக்கும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !