உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாழைத்தார் விலை உயர்வு இல்லை; விவசாயிகள் ஏமாற்றம்

வாழைத்தார் விலை உயர்வு இல்லை; விவசாயிகள் ஏமாற்றம்

மேட்டுப்பாளையம் : நேந்திரன், கதளி வாழைக்காய்களின் விலையில் உயர்வு இல்லாததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலை நால் ரோட்டில், தனியார் வாழைத்தார் ஏல மண்டி உள்ளது. இங்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிறு, புதன் கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்திற்கு காரமடை, சிறுமுகை, மேட்டுப்பாளையம், தெங்குமரஹாடா, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து, 3000 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த வாரத்தை போன்று, இந்த வாரமும் அதே விலைக்கு, வாழைத்தார்கள் ஏலம் போனது. விலை உயரும் என எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். நேற்று நடந்த ஏலத்தில், நேந்திரன் ஒரு கிலோ குறைந்தபட்சம், 30 ரூபாய்க்கும், அதிகபட்சம், 40 ரூபாய்க்கும், கதளி குறைந்தபட்சம், 40க்கும் அதிகபட்சம், 50 ரூபாய்க்கும் ஏலம் போனது. பூவன் ஒரு தார் குறைந்தபட்சம், 250, அதிகபட்சம், 700 ரூபாய்க்கும், ரஸ்தாலி, 250, அதிகபட்சம், 900க்கும், தேன் வாழை, 250, அதிகபட்சம், 1000க்கும், செவ்வாழை குறைந்த பட்சம், 250, அதிகபட்சம், 1,100 ரூபாய்க்கும், மொந்தன், 150 அதிகபட்சம், 350க்கும், பச்சை நாடன், 200க்கும் அதிகபட்சம், 450 ரூபாய்க்கும், ரோபஸ்டா, 200 ரூபாய்க்கும், அதிகபட்சம், 650 ரூபாய்க்கும் ஏலம் போனது. ஜூலை மாதம் வரை, வாழைத் தார்களின் வரத்து குறைவாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் வாழைத்தார்கள் அறுவடை சீசன் துவங்கும் என, வாழைத்தார் ஏல மண்டி நிர்வாகிகள் வெள்ளிங்கிரி, சின்னராஜ் ஆகியோர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி