உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையில் மின்சாரம் தயாரிப்பு வேண்டாம்!: மாநகராட்சி கூட்டத்தில் எதிர்ப்பு

குப்பையில் மின்சாரம் தயாரிப்பு வேண்டாம்!: மாநகராட்சி கூட்டத்தில் எதிர்ப்பு

கோவை: மாநகராட்சி மாமன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கடந்த 2 கூட்டங்கள் களேபரமானதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கூட்டம் துவங்கியவுடனே மேயர் ரங்கநாயகி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார். கவுன்சிலர்கள் தங்களின் பிரச்னைகளை முன்பே மனுவாக வழங்க வேண்டும். மேடை அருகே யாரும் வரக்கூடாது. அவரவர் இடத்தில் அமர்ந்து பேச வேண்டும் என்றார். வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், சிறந்த மாநகராட்சிக்கான விருது நமக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் பிரநிதிகளை அழைத்து விருது கொடுக்காத த.வெ.க. அரசுக்கு கண்டனம் என்றார். காங்., கவுன்சிலர்கள் குழு தலைவர் ஜெயபால் எதிர்த்து பேசியதால் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமென, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேனர் ஏந்தி போராடினர். அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குழு தலைவர் பிரபாகரன் அளித்த பேட்டியில், குப்பையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் டில்லி, ஐதராபாத், பெங்களூர், மணலி பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு தோல்வியடைந்தது. அதிலிருந்து வெளியேறும் காஸ், மக்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும். கோவையை ஹிரோஷிமா நாகசாகியாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்றார். தி.மு.க., கம்யூ., கவுன்சிலர்களும் அத்திட்டத்தை எதிர்த்தனர். தி.மு.க. கவுன்சிலர்கள் குழு தலைவர் கார்த்திகேயன், வெள்ளலூர் குப்பை கிடங்கால் ஏற்கனவே கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராடுவோம் என்றார். கமிஷனர் ரவி தேஜா, குப்பையை அகற்றுவதே திட்டத்தின் நோக்கம். இதற்காக தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அனைவரின் கருத்தையும் கேட்டு முடிவு செய்யப்படும் என கூறினார். திட்டத்தை கைவிட கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மேயர் ரங்கநாயகி, டெண்டர் நடைமுறையை நிறுத்தி வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன் என்றார். ரூ.50 லட்சம் மதிப்பில் ரோடுகளில் பேட்ச் ஓர்க், சுகாதாரப்பணி, காலி இடங்களில் குப்பை கொட்டுவதற்கு வரி உள்பட மன்றத்தில் வைத்த பல பொருள்களுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். டெண்டரே விடாமல் கால நீட்டிப்பு செய்யப்படுகிறது என புகார் கூறினர். கமிஷனர் ரவி தேஜா, திட்டங்களை நிறைவேற்றவில்லை என்கிறீர்கள். கொண்டு வந்தால் இத்திட்டம் வேண்டாம் என்கிறீர்கள். இப்படியே போனால் மாநகராட்சி முடங்கிவிடும் என்றார். நேற்றைய கூட்டத்தில் 128 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வ.உ.சி. பூங்கா உணவுக்கடை வ.உ.சி. பூங்கா விளையாட்டு மைதானம் அருகே ரூ.1.33 கோடி மதிப்பில் தெருக்கடைகளை அமைக்க அனுமதி கோரப்பட்டது. அதற்கு கிழக்கு மண்டல தலைவர் லக்மி இளஞ்செல்வி, வ.உ.சி. பூங்கா வளாகத்தில் ஏற்கனவே திறந்த கடைகளே காலியாக உள்ளன. மாநகராட்சியின் பல பகுதிகளில் இதே நிலை உள்ளது. புதிய கடை தேவையற்றது. அந்நிதியை வேறு திட்டத்துக்கு பயன்படுத்தலாம் என்றார். திட்டத்துக்கு மேலும் பல கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பொருள் நிறுத்தி வைக்கப்பட்டது. 'வசூலில் சூயஸ் கறார்' 24 மணி நேர குடிநீர் திட்டத்தில், பயன்படுத்தியதை விட அதிக கட்டணம் விதிக்கப்படுவதாக பல கவுன்சிலர்கள் புகார் கூறினர். 72வது வார்டு கவுன்சிலர் செல்வராஜ், குடிநீர் கட்டணம் வசூலிக்கும் சூயஸ் ஊழியர்கள் பைனான்ஸ் நிறுவனத்தினர் போல கறாராக நடந்து கொள்கிறார்கள். ஆன்லைனில் கட்டணம் செலுத்தியதாக கூறியும், மரியாதை குறைவாக பேசுகின்றனர். நான் கவுன்சிலர் என கூறியதற்கு, யாரா வேண்டுமானாலும் இருந்துட்டு போங்க என்கின்றனர். அடுத்த கூட்டத்தில் சூயஸ் நிறுவனத்தை சேர்ந்தோர் பங்கேற்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்