உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாலாங்குளக்கரை மீது யாருக்குமில்லை அக்கறை; ரயிலில் இருந்து வீசப்படும் குப்பையால் துாய்மைக்கு கல்லறை

வாலாங்குளக்கரை மீது யாருக்குமில்லை அக்கறை; ரயிலில் இருந்து வீசப்படும் குப்பையால் துாய்மைக்கு கல்லறை

கோவை : கோவை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, வாலாங்குளம் வரை ரயில்கள் இயக்கப்படும்போது, பச்சை நிற பிளாஸ்டிக் பைகளில் சேகரிக்கப்படும் குப்பையை, வாலாங்குளத்தின் கரையில் வீசிச் செல்கின்றனர். அப்பகுதி முழுவதும் குப்பை சிதறிக் கிடக்கிறது.கோவை நகரின் மையப்பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்திருக்கிறது. 2023-24 நிதியாண்டில் மட்டும், 1.1 கோடி பயணிகள், இந்த ஸ்டேஷனை பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் மூலமாக உருவாகும் குப்பையும், டன் கணக்கில் சேகரமாகிறது. இவற்றை அப்புறப்படுத்துவதே இமாலய வேலையாக இருக்கிறது.ரயில்வே ஸ்டேஷனில் உருவாகும் குப்பை, தரம் பிரித்து, தனியார் நிறுவனம் மூலமாக அப்புறப்படுத்தப்படுகிறது. பிளாட்பாரங்களில் சேகரிக்கும் குப்பையை, கறுப்பு பேக்குகளில் மூட்டை மூட்டையாக சேகரித்து, தரம் பிரிக்கப்படுகிறது. அவற்றை தனியார் நிறுவனத்தினர், வேன்களில் எடுத்துச் செல்கின்றனர். இதேபோல், ரயிலில் சுத்தம் செய்யும் குப்பை, கூட்ஸ் ஷெட் ரோட்டில் உள்ள பணிமனையில், இறக்கி வைக்கப்படுகிறது.பணிமனைக்கு ரயில்கள் வருவதற்கு, வாலாங்குளம் பகுதி வரை சென்று, திரும்பி வர வேண்டும். அதேபோல், ரயிலை சுத்தப்படுத்தி, தயார் செய்தபின், மீண்டும் டிராக்குக்கு செல்வதற்கு, வாலாங்குளம் வரை சென்று, திரும்பி வர வேண்டும்.அவ்வாறு செல்லும்போது, ரயில் பெட்டிகளில் கழிப்பறைக்கு அருகே உள்ள தொட்டிகளில், சேகரமாகும் குப்பையை, வாலாங்குளக் கரையில் வீசிச் செல்கின்றனர்.யாரும் இவற்றை சுத்தம் செய்வதில்லை அதனால், நெடுந்துாரத்துக்கு குப்பை பரவிக் கிடக்கிறது. பயணிகள் பயன்படுத்திய உணவு கழிவு, உணவு காலி டப்பாக்கள், பேஸ்ட், சோப் காகிதங்கள் கிடக்கின்றன.பொதுமக்கள் யாரும் இப்பகுதிக்கு வந்து, குப்பை கொட்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்பதாலும், பச்சை நிற பிளாஸ்டிக் பேக், ரயிலில் பயன்படுத்துவது என்பதாலும், ரயில்வே அதிகாரிகள் கண்காணித்து, ரயிலில் இருந்து குப்பையை துாக்கி வீசுவதை தடுக்க வேண்டும்.தண்டவாளங்களின் இருபுறமும், பரவிக் கிடக்கும் குப்பையை சுத்தப்படுத்தி, துாய்மையான ரயில்வே ஸ்டேஷன் என கூறும் அளவுக்கு, பராமரிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ