தனியார் மருத்துவமனைகளில் பார்க்கிங் இல்லை; நோயாளிகள் அதிருப்தி
பொள்ளாச்சி; பொள்ளாச்சி நகரில் செயல்படும் மருத்துவமனைகளில், 'பார்க்கிங்' உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றாததால், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்டு, கிளினிக்குகள், மருத்துவ ஆய்வகங்கள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ேஹாம்கள் ஆகியவை செயல்படுகின்றன.போதிய இட வசதி, குடிநீர், கழிப்பிட வசதி, ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான ஊழியர்கள் இருத்தல் வேண்டும். ஆனால், பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில், 'பார்க்கிங்' வசதி இல்லை.மக்கள் கூறியதாவது:பொள்ளாச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில், அரசின் கண்துடைப்புக்காக 'பார்க்கிங்' வசதி காண்பிக்கப்பட்டுள்ளது. நடக்க முடியாத நோயாளிகளை அழைத்து செல்லும் போது மட்டும், மருத்துவமனை முகப்பு பகுதி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.அதன்பின், வளாகத்திற்குள் இருந்து வாகனங்களை எடுத்து வெளியில் நிறுத்த வேண்டும் என, நிர்பந்திக்கின்றனர். நோயாளியை அழைத்து வரும் உறவினர்கள், வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தம் செய்ய அங்குமிங்கும் அலைய வேண்டியுள்ளது.'பார்க்கிங்' என, குறிப்பிட்டுள்ள இடத்தில், டாக்டர்களின் வாகனங்கள் மட்டுமே நிறுத்த அனுமதிக்கின்றனர்.மேலும், மருத்துவம் சார்ந்த நிறுவனங்களில் டாக்டர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் மட்டுமே தகவல் பலகையில் இடம்பெற்றுள்ளது. அவர்களின் வருகை நேரம், படுக்கை வசதிகள் உள்ளிட்ட பல விபரங்கள் குறிப்பிடப்படுவதில்லை.இதனால், டாக்டர் வருகைக்காக, பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில், விதிமுறைகள் பின்பற்றப்படுவதும் கிடையாது. மருத்துவ பணிகள் துறையினர் எவ்வித 'கவனிப்புக்கும்' தலைசாய்க்காமல், நடுநிலையுடன் ஆய்வு நடத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.