வரப்பு அமைத்த அறிகுறியே இல்லை: நுாறு நாள் திட்ட தணிக்கை அறிக்கையில் பகீர்
அன்னுார்: 'நுாறு நாள் திட்டத்தில் வரப்பு அமைத்த அறிகுறியே இல்லை,' என காட்டம்பட்டி ஊராட்சி தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வாரம் பத்து ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணிகள் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டு சிறப்பு கிராம சபையில் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்படுகிறது.அன்னுாரில் கடந்த 21ம் தேதி முதல் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு சமூக தணிக்கை அறிக்கை தயாரிக்கப்பட்டது. நேற்று கணேசபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் பிரபாவதி தலைமையில் நடந்தது. ஊராட்சி தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.இக்கூட்டத்தில் வட்டார வள அலுவலர் கனகராஜ் வாசித்த தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு தோட்டத்தில் மண் வரப்பு அமைத்ததாக, 63 ஆயிரத்து 290 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், அங்கு மண் வரப்பு அமைத்த அறிகுறியே இல்லை. தொழிலாளர்கள் வருகை பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.எனவே, அதில் வழங்கப்பட்ட 4080 ரூபாயை அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும். வேலை செய்யாத இரண்டு நபர்களுக்கு 1300 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இதை திரும்ப வசூலிக்க வேண்டும்.இதே போல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 17 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் எந்த வீட்டிலும் இந்தத் திட்டத்திற்கான சின்னம் அல்லது பெயர் பலகை இல்லை.இந்தத் திட்ட பயனாளிகளிடம் தொழிலாளர் வைப்பு நிதியாக தலா 1700 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் வைப்பு நிதி வசூலிக்க கூடாது. அவர்களுக்கு அதை திருப்பித் தர வேண்டும். மாரப்பன் என்பவருக்கு வேலை அட்டை இல்லாமல் 90 நாட்கள் வேலை தரப்பட்டுள்ளது.இவ்வாறு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.தொழிலாளர்கள் பேசுகையில், 'ஆட்டு கொட்டகை கோரி பத்து முறை மனு கொடுத்தும், இதுவரை உத்தரவு வழங்கவில்லை. ஆண்டிச்சி பாளையத்தில் வீடுகளுக்குள் மழை நீர் வருகிறது. உறிஞ்சுகுழி அமைக்கப்பட்ட இடங்களில் உறிஞ்சி குழியிலிருந்து திரும்ப வீட்டுக்குள் கழிவு நீர் வருகிறது. ஓட்டு வீடு பழுது பார்க்க நிதி வழங்க வேண்டும்,' என்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ், ஊராட்சி துணைத் தலைவர் லட்சுமி காந்த், கிராம உதவியாளர் கார்த்தி, பொதுமக்கள் பங்கேற்றனர். வார்டு உறுப்பினர் சுகுண பிரியா கோவிந்தராஜ் கூறுகையில், 'கிராம சபை கூட்டம் குறித்து ஏழு நாட்களுக்கு முன் தகவல் தர வேண்டும். சில வார்டு உறுப்பினர்களுக்கு கூட்டம் துவங்குவதற்கு, ஒரு மணி நேரம் முன்பு தான் தகவல் தெரிவித்தனர். இதனால் பங்கேற்க முடியவில்லை,' என்றார்.